தமிழகத்தில், மேட்டுப்பாளையத்தில் இருந்து, உதகமண்டலம் வரை செல்லும் மலை ரயில், மாதம் முப்பது நாட்களில், இருபது நாட்களுக்கு மேல் பழுதாகி, நடுவே நின்றுவிடும். அங்கிருந்து பயணிகள், பஸ்கள் மூலம் பயணிப்பர். ஐநூறுக்கு மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளையும், ஐந்து அண்ணா பல்கலைக்கழகங்களையும், தனியார் நடத்தும் பத்துக்கும் மேற்பட்ட பொறியியல் பல்கலைக்கழகங்களையும் கொண்டுள்ள தமிழகத்தில், பழுதடையாத ஒரு மலை ரயிலைக் கூட உருவாக்க முடியவில்லை என்று சொன்னால், நம் பொறியியல் கல்வியை என்னவென்பது?
அண்மையில் வெளிவந்துள்ள பத்திரிகை செய்தியின்படி, நம் பல்கலைக்கழகங்களிலிருந்தும் கல்லூரிகளில் இருந்தும் வெளிவரும் நூறு பொறியியல் பட்டதாரிகளில், இரண்டு பட்டதாரிகள் மட்டுமே, அவர்கள் படித்து வெற்றி பெற்ற பாடத்தில், வேலைக்கு தகுதியானவர்களாக இருக்கின்றனர். இச்செய்தி, நம் நாட்டில் உள்ள பொறியியல் கல்வித் தரம் பற்றிய ஐயத்தை பன்மடங்கு ஆக்குகிறது.பொறியியல் கல்வியை தனியார் வசமும், தனியார் வணிக வசமும், நம் மேதகு அரசுகள் ஒப்படைத்தன. அதன் பிறகே, ஐநூறுக்கும் மேற்பட்ட கல்லூரிகள், ஆங்காங்கே தோன்றின. இக்கல்லூரியின் தரம் பற்றி ஆராய, சில ஆண்டுகளுக்கு முன், ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு தன் அறிக்கையில், "60 சதவீத பொறியியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் என்ற பெயருக்கே தகுதியில்லாதவை. போதிய அளவு சோதனைச்சாலைகள் இல்லை, வகுப்பறைகள் இல்லை.பணியாற்றும் ஆசிரியர்கள், மிகத் தகுதி குறைவானவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு அளிக்கப்படும் ஊதியம் மிகக் குறைவாக இருக்கிறது. பெரும்பாலானோர் அனுபவம் குறைந்தவர்களாக இருக்கின்றனர்' என, தெரிவித்துள்ளது.
தமிழகத்தைப் பொறுத்த அளவில், கடந்த அரசிலும், அதற்கு முன் இருந்த அரசிலும் இடம் பெற்றிருந்த அமைச்சர்களில் கணிசமானோருக்கு, பொறியியல் கல்லூரிகள் சொந்தமாக இருக்கின்றன. இவை அமைச்சர்களாலும், செல்வந்தர்களாலும், வணிகர்களாலும் நடத்தப்படுவதற்கு அடிப்படை காரணம், பணம் காய்ச்சி மரங்களாக இக்கல்லூரிகள் இருப்பது தான். இந்தக் கல்வி ஆண்டில் தான், பொறியியல் கல்லூரிக்கு வரும் விண்ணப்பங்களின் பெருகிய எண்ணிக்கை குறைந்திருக்கிறது.பல நிறுவனங்கள், பெறும் பணத்திற்கு ரசீதும் கொடுப்பதில்லை. பல கல்வி நிறுவனங்கள், காசோலையாகவோ, டி.டி.,யாகவோ கட்டணத்தைப் பெறுவதில்லை. "ரொக்கமாக கொடுக்க வேண்டும்' என, நிபந்தனை போடுகின்றன. கணக்குக் காட்டுவதிலிருந்து தப்புவதற்கு இந்த ஏற்பாடு.சரி, தமிழகத்தில், பொறியியல் கல்வி பெருகினால் நல்லது தானே என்று நினைக்கலாம். பெரும்பான்மையான பாடத் திட்டங்களும், அமெரிக்க வேலைவாய்ப்பை நம்பியே அமைக்கப்படுகின்றன. அதாவது, அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதற்காக, இங்கே கல்வி உற்பத்தி நடக்கிறது.சரியான கல்வி எவ்வாறு இருக்க வேண்டும்? அந்த மண்ணுக்குரிய, அந்தந்தப் பகுதி மக்களுக்குரிய தேவைகளை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும். இங்குள்ள ஊட்டி ரயிலுக்கு பதில் சொல்ல முடியாத பொறியியல் பல்கலைக்கழகங்களால் பயன் என்ன?-Thanks Dinamalar
No comments:
Post a Comment