Monday, August 8, 2011

கருணாநிதி குடும்பத்தினரின் சொத்துப் பட்டியல்… உண்மை என்ன?

கடந்த சில தினங்களாகவே பத்திரிகைகளில் அடிபடும் சமாச்சாரம் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்துகள் குறித்து ஜார்ஜ் பெர்ணான்டஸின் தி அதர் சைட் பத்திரிகை வெளியிட்டுள்ள சொத்துப் பட்டியல்தான்.
பிரதமரே ஆச்சர்யப்பட்டு கருணாநிதி குறித்து கமெண்டை அடித்தார் என ஏதோ ‘பக்கத்திலிருந்து’ கேட்டதைப் போல மசாலா சேர்த்து இதை தமிழ்ப்படுத்தியுள்ளது ஜூவி.
இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 69 சொத்துகள் கருணாநிதி ஒருவருக்கே சொந்தமானதல்ல. அவர் குடும்பம் பெரியது. குடும்ப உறுப்பினர்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். கருணாநிதியின் சொந்தக்காரர்கள் என்பதால் எந்த தொழிலும் செய்யாமல், அடுத்த வேளை சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாத அளவுக்கு இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களை தூய்மையான அரசியல்வாதிகளாகத ஏற்க முடியும் என்று சொல்ல வருகிறார்களா?
தங்கள் தொழிலுக்காக கட்சி, ஆட்சி, அதிகாரத்தைப் பயன்படுத்தி இவர்கள் சம்பாதித்தது உண்மையாகவே இருந்தாலும், இந்த சொத்துக்கள் யாரையும் ஏமாற்றி அபகரித்ததல்ல. சட்டப்படி பதிவு செய்யப்பட்டவை. எந்த பினாமி பெயரிலும் இல்லாமல் அவரவர் சொந்த அல்லது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில்தானே உள்ளன? இவற்றை இன்னின்னாரிடமிருந்து அபகரித்துவிட்டார்கள் கருணாநிதி குடும்பத்தினர் என்றால், அதுதான் செய்தி… நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய குற்றம்.
இன்னொரு முக்கியமான விஷயம், இந்த சொத்துக்களில் பெரும்பாலானவற்றின் விவரங்களை கருணாநிதி, தயாளு அம்மாள், ராசாத்தி அம்மாள், ஸ்டாலின், அழகிரி, கனிமொழி போன்றவர்கள் தேர்தலின் போது விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளனர் என்பதை இப்போது பலரும் மறந்துவிட்டது ஆச்சர்யம்தான்.
தேர்தல் ஆணையத்திடம் கருணாநிதி மற்றும் அவர் குடும்பத்தினர் கொடுத்துள்ள சொத்துக்களின் விவரங்களை கேட்டுப் பெற்றுத்தான் அந்த பத்திரிகை இந்தப் பட்டியலைத் தயாரித்துள்ளது.
இதுதவிர, சென்னையில் உள்ள சில அரசியல் நிருபர்களிடம் தகவல் கேட்டு, அவர்கள் சொன்னதை மட்டும் வைத்து சில சொத்துகளை இந்தப் பட்டியலில் இணைத்துள்ளனர், மதிப்பைக் குறிப்பிடாமல். கருணாநிதி அல்லது அவரது சொந்தக் காரர்களிடமே இவற்றின் மதிப்பையும் கேட்டிருக்கலாமே…
‘எச்சில் தட்டு கழுவி பிழைப்பை ஆரம்பித்தேன்… இன்று தொழிலதிபர் ஆனேன்’ என வேறு யார் சொன்னாலும் ஒப்புக் கொள்வார்கள்… அதை கலாநிதியோ, கருணாநிதி குடும்பத்தினரோ சொன்னால் ஒப்புக்கொள்ளமாட்டார்களா?
திருட்டு ரயிலேறி வந்தார் கருணாநிதி என்று பழைய பல்லவியைப் பாடுகிறார்கள். 70 ஆண்டுகளுக்கு முன் திருட்டு ரயிலேறியவர், தனது முயற்சி, சினிமா – அரசியலில் கிடைத்த செல்வாக்கு, அதன் மூலம் அடைந்த பலன்கள், 5 முறை முதல்வர் என படிப்படியாக உயர்ந்திருக்கிறார். இன்றைக்கும் அவர் திருட்டு ரயிலேறும் நிலையிலேயே இருக்க வேண்டும் என்று நினைப்பது சரிதானா?
ஒரு சொத்து வாங்கும்போது, பதிவு செய்யும்போது இருக்கும் மதிப்பு மிகக் குறைவு. 50 ஆண்டுகளுக்குமுன் கோபாலபுரம் வீட்டை அவர் வாங்கியபோது அதன் மதிப்பு இவர்கள் குறிப்பிடுவது போல ரூ 5 கோடியா? ஒரு சில ஆயிரங்கள்தானே. அதை அவர் சம்பாதித்துதானே வாங்கினார்? இன்று அதையும் சொத்துப்பட்டியலில் சேர்க்கிறார்கள், ஏதோ கடந்த 5 ஆண்டுகளில் அடித்த பணத்தில் வாங்கியதைப் போல…
சாதாரண அரசு ஊழியர் அல்லது போலீஸ் அதிகாரிகளுக்கே இன்று சராசரியாக பத்துக்கும்மேற்பட்ட அசையாத சொத்துக்கள் உள்ளன. கருணாநிதியின் பெரும் குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் எந்த தொழிலுக்கும் போகக் கூடாதா அல்லது சொத்துக்கள்தான் வாங்கக் கூடாதா? இவர்கள் காமராஜர், கக்கன் மாதிரி அவதார புருஷர்கள் அல்ல. வாய்ப்பு இருக்கும் போதே தூற்றிக் கொள்ளத் தெரிந்த சாதாரணர்கள்.
மூன்றரை லட்ச ரூபாய் கடனை கட்ட முடியாமல் மஞ்சள் கடிதம் கூட கொடுக்கத் தயாராக இருந்த ஜெயலலிதாதான், பின்னர் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக வழக்கில் சிக்கிக் கொண்டு, இன்றும் வாய்தா வாங்கிக் கொண்டிருக்கிறார் என்பதை மறந்துவிட்டார்களா என்ன?
இதேமாதிரி சொத்துப் பட்டியலை ஜெயலலிதாவுக்கு எதிராகவும் போட்டார்கள் 1996-ல். அந்தப் பட்டியலில் ஜெயலலிதா – சசிகலா மற்றும் குடும்பத்தினரின் சொத்துக்கள் 100-ஐத் தாண்டியிருந்தன. ஒரு தனி புத்தகமே போட்டு விநியோகித்த திமுக, சில மாதங்களில் பதவிக்கு வந்ததும் ஜெயலலிதா – சசிகலாவின் பல சொகுசு பங்களாக்களுக்கு ஒரு மினி சுற்றுலாவே அழைத்துப் போனது நிருபர்களை.
இன்று மீண்டும் ஜெயலலிதா, சசிகலா குடும்பத்தின் சொத்துப்பட்டியலை போட்டுப் பார்க்கட்டும்…
கூட்டத்தில் தர்ம அடி கொடுப்பது என்பார்களே… அப்படியொரு நிலைதான் இப்போது திமுக தலைவர் மற்றும் அவர் குடும்பத்தினருக்கு. அவர்களுக்கு சாதகமாக என்றில்லை… ‘என்னய்யா இது, கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க’ என்று யாராவது சொன்னால்கூட, இவன் திமுக-காரன்யா என்று முத்திரை குத்த தயாராக பெரிய கூட்டமே உள்ளது. இவர்களுக்கு வெறும் பரபரப்புதான் முக்கியம். அதில் உண்மையிருக்கிறதா இல்லையா என்பதல்ல.
70 ஆண்டுகள் அரசியலிலும், 30 ஆண்டுகள் அதிகாரத்திலும் இருந்த ஒரு கட்சியின் தலைவர், அவரது குடும்பத்தினர் சேர்த்த சொத்துகள் இவை என்றால் அதில் ஆச்சர்யம் ஏதுமில்லை.
1.76 லட்சம் கோடி அடித்தவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள ஒரு கட்சித் தலைவரின் குடும்பத்துக்கு ரூ ஆயிரம் கோடி அளவுக்கு கூட சொத்து மதிப்பு இல்லையே… இது பெரிய முரண்பாடு அல்லவா… கடந்த 5 ஆண்டுகளில் கருணாநிதி, அவர் குடும்பம், ஆ ராசா வகையறாக்கள் குவித்த சொத்துக்களைக் காட்டும் முயற்சியில் அல்லவா தி அதர் சைட் இறங்கியிருக்க வேண்டும்!
சட்டத்தை ஏமாற்றி, பினாமிகளின் பெயர்களில், வெளிநாடுகளில் கருணாநிதியோ, அவரது குடும்பத்தினரோ சொத்துக்களை வாங்கிக் குவித்திருந்தால், கறுப்புப்பணம் பதுக்கி வைத்திருந்தால், அதை வெளியில் கொண்டு வரட்டும். அதுதான் நியாயமே தவிர, ஏற்கெனவே தேர்தல் விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்ட, வருமான வரித் துறைக்கும் நன்கு தெரிந்த சொத்துக்களை பட்டியலிட்டுக் கொண்டிருப்பது, திமுகவுக்கு விழும் தர்மஅடிகளுக்கு சமமானதே!

No comments:

Post a Comment